கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்
தமிழகத்தில் கடந்த வாரத்தில் கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்........
செய்தியை கேட்டவுடன் உங்களுக்கு பல வினாக்கள் எழுந்திருக்கும். முக்கியமாக
- இது குறித்து ஏன் ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை / எழுதப்படவில்லை
- மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்களே, எதிர்ப்பு என்னவாயிற்று
- அப்படி என்றால் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதா.
இனி விடைகள்
1. இது குறித்து ஏன் ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை / எழுதப்படவில்லை
ஏனென்றால் இது புது நிகழ்வு கிடையாது. வழக்கமான ஒன்றுதான்
2. மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்களே, எதிர்ப்பு என்னவாயிற்று.
அந்த எதிர்ப்பு அப்படியேத்தான் உள்ளது. அது வேறு திட்டம். இது வேறு திட்டம் :) :(
3. அப்படி என்றால் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதா.
அது வேறு. இது வேறு . இது மாநில அரசின் (தமிழக அரசின்) திட்டம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
:) :)
குழப்பமாக இருக்கிறதா ? தெளிவு படுத்திவிடுகிறேன்
எம்.பி.பி.எஸ். படிப்பு முடிந்து அதன் பின் கட்டாயமாக ஒரு வருடம் அரசு மருத்துவ நிலையங்களில் (அதில் வெறும் 4 மாதங்கள் மட்டும் கிராமங்களில்) தினம் 266 ரூபாய்க்கு தொகுப்புதியத்தில் பணி புரிய வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் வேறு....
பட்ட மேற்படிப்பு படித்த பின் 2 அல்லது 3 ஆண்டுகள் கிராமப்புறங்களில் காலவரைமுறை ஊதியத்தில் பணி புரிய வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் வேறு
மத்திய அரசின் திட்டத்திற்கு தான் எதிர்ப்பே தவிர மாநில அரசின் திட்டத்தை யாரும் எதிர்க்க வில்லை. அது சீரிய முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
அது சரி, மத்திய அரசு ஒரு வருடம் பணி புரிய சொன்னதற்கே எதிர்த்தவர்கள் தமிழக அரசு மூன்று வருடம் பணி புரிய சொல்லும் போது எதிர்க்கவில்லையே.
ஏன்
எனென்றால் இரண்டு திட்டங்களுக்கும் பெரிரிரிய்ய்ய்யயயயயய வித்தியாசம் உள்ளது
மத்திய அரசின் திட்டம் | தமிழக அரசின் திட்டம் |
எம்.பி.பி.எஸ் முடிந்தபின் | பட்டமேற்படிப்பு முடிந்தபின் |
1 வருடம். அதில் 4 மாதங்கள் மட்டுமே கிராமப்புறங்களில். மற்றுமொரு நான்கு மாதம் மருத்துவக்கல்லூரியில். | இரண்டு (அல்லது மூன்று) வருடங்கள் |
ஒரு மருத்துவர் வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே ஒரு நிலையத்தில் பணி புரிய முடியும். | மருத்துவர் விருப்பபடும் வரை அதே நிலையத்தில் பணிபுரியலாம் |
தொகுப்பூதியம் | கால முறை ஊதியம் |
ஒப்பந்த பணி | தமிழக அரசின் விதி 10 அ 1ன் கீழ் பணி நியமனம் |
சம்பளம் 8000 ரூபாய் மட்டுமே | 8000-275-13500 என்ற சம்பள ஏற்றமுறையில் சம்பளம். மொத்தமாக சுமார் 20000 வரை பெறலாம் |
ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள அமல்படுத்தப்பட்டாலும் சம்பளம் 8000 ரூபாய் மட்டுமே | ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள அமல்படுத்தப்பட்டபின் 25,000 வரை ஊதியம் அதிகரிக்கலாம் |
ஏற்கனவே ஒரு மருத்துவர் பணி புரியும் இடத்தில், அந்த மருத்துவருக்கு பதிலாக (அதாவது அவரது வேலைக்கு ஆப்பு வைத்து விட்டு) நியமணம் | இந்த திட்டத்திற்காக கடந்த ஆண்டுகளில் சுமார் 800 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன |
வருங்காலத்தில் அரசு பணிக்கு மருத்துவர் நியமனம் தடை அல்லது மிகவும் குறைக்கப்படும் | தமிழ்நாடு தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நியமனம் தொடர்ந்து நடைபெரும் |
சட்டீஸ்கர் முதல் சம்பல் பள்ளத்தாக்கு வரை எங்கு வேண்டுமானாலும் நியமனம் | பணியிடங்கள் தமிழகத்திற்கு உள் மட்டும்தான் |
விடுப்பு கிடையாது | அரசு ஊழியர்களுக்கு உள்ள அனைத்து விடுப்பும் உண்டு |
மகப்பேறு விடுப்பு கூட கிடையாது | மகப்பேறு விடுப்பு உண்டு |
ஒப்பந்த காலம் முடிந்தபின் மருத்துவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார் | ஒப்பந்த காலம் முடிந்தபின் தொடரவேண்டுமென்றால் தொடரலாம் |
சம்பள உயர்வு கிடையாது | வருடாந்திர ஊதிய உயர்வும், அகவிலைப்படி உயர்வும் உண்டு |
கண்டிப்பாக பணிபுரிய வேண்டும் | அபராதம் செலுத்தினால் பணிபுரிய தேவையில்லை (அபராதம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை) |
அனைவரும் எதிர்க்கிறார்கள் | யாரும் எதிர்க்கவில்லை |
இதில் முக்கிய விஷயங்கள்
1. பணி நிரந்திரம்
2. புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்
3. தேர்வானையம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்வது
இன்று மருத்துவ கல்லூரிகளில் படிப்பவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்
1. ஒரு மருத்துவமனை சொந்தக்காரரின் மகன் / மகள் / மருமகன் / மருமகள் (நன்றாக கவனியுங்கள் - நான் மருத்துவர் என்று சொல்லவில்லை - மருத்துவமனை சொந்தக்காரர் என்று சொன்னேன் - இரண்டிற்கும் நிறைய வேறு பாடு உள்ளது. தமிழகத்தில் உள்ள 60,000 மருத்துவர்களில் 45,000 மருத்துவர்கள் சொந்த மருத்துவமனை வைத்திருப்பதில்லை)
2. பிற தொழிலதிபர்களின் மகன் / மகள் மற்றும் அரசியல்வாதிகளின் மகன் / மகளும் இந்த குழுமத்தில் அடக்கம்
3. ஆசிரியர்கள், விவசாயிகள், பிற அடிப்படை தொழிலாளிகளின் மகன் / மகள்.
இதில் முதலாவது வகையினர் (சுமார் 10 சதவிதம்) எம்.பி.பி.எஸ் முடித்த உடன் தங்களின் சொந்த மருத்துவ மனைகளில் தொழிலை ஆரம்பிக்கலாம்
இரண்டாவது ரகத்தினர் (சுமார் 10 சதவிதம்) வெளிநாடு செல்ல முயல்வார்கள்
மூன்றாவது தான் பெரும்பாண்மையே (80 சதவிதம்). இவர்களுக்கு தேவை அரசு வேலை.
இப்பொழுது மத்திய அரசின் திட்டத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்
முதல் இரண்டு பிரிவினரும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்கும் காரணம் வேறு
மூன்றாவது பிரிவினர் எதிர்க்கும் காரணம் வேறு.
முதல் இரண்டு பிரிவினரும் படிப்பு முடிந்த உடன் பணிபுரிய மருத்துவமனை அல்லது கடவுச்சீட்டு தயாராக உள்ளது. அவர்களை பொருத்தவரை இந்த திட்டத்தினால் அவர்களில் வாழ்க்கையில் ஒரு வருடம் வீணாகிறது. இவர்கள் எதிர்ப்பது ஒரு வருடம் கூடுவதற்காக
மூன்றாவது பிரிவினரின் நிலை முற்றிலும் வேறு
இதில் பெரும்பாலனவர்கள் கல்விக்கடன் வாங்கி படிப்பவர்கள்.
அவர்களின் பெற்றோர் ஓய்வு பெற்றிருப்பார்கள் அல்லது ஒரு வருடத்தில் ஓய்வு பெறும் நிலையில் இருப்பார்கள்.
அவர்களுக்கு குடும்பத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் . (12ஆவது வகுப்பு வரை கூட படித்த பக்கத்து வீட்டு மாணவன், அப்பாவின் அலுவலக நண்பரின் மகள், சித்தப்பா மகன் அனைவரும் வேலைக்கு சென்று இரண்டு வருடமாகி, கார் வாங்கி, வீட்டிற்கு பணம் அனுப்பி, கடன் வாங்கி வீடு கட்ட வானம் தோண்டிவிட்ட நிலையில்) இவர்கள் அரசு வேலையை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
மத்திய அரசின் திட்டத்தினால் அரசு பணியிடங்கள் சுமார் 35,000 வரை (இந்தியா முழுவதும்) ரத்து செய்யப்படுகிறது. எனவே இவர்களால் அரசு வேலையில் சேரவே முடியாது.
இந்த பிரிவினர் மத்திய அரசின் கட்டாய திட்டத்தை எதிர்ப்பதன் முக்கிய காரணம் படிப்பு காரணம் ஒரு வருடம் கூடுவதோ, அல்லது கிராமப்புறங்களுக்கு செல்லவேண்டும் என்பதோ அல்ல. பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதால் அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதே மூன்றாவது பிரிவினர் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க காரணம்.
1 வருடம் வேலை செய்ய மாட்டேன் என்று கூறியவர்கள் 3 வருடம் வேலை செய்ய சம்மதித்தது ஏன்
ஏனென்றால்
1. தமிழக அரசின் திட்டத்தால் பணியிடங்கள் அழிக்கப்படவில்லை. மாறாக கடந்த சில வருடங்களாக சுமார் 800 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த இரண்டு வருடத்தில் சுமார் 3200 மருத்துவர்கள் கால முறை ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
2. இரண்டு / மூன்று வருடம் கழித்து விருப்பப்பட்டால் அரசுப்பணியில் தொடரலாம்
3. சுமார் 20000 வரை மாதம் சம்பளம். வருடாந்திர ஊதிய உயர்வு உண்டு. ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள அமல்படுத்தப்பட்டபின் 25,000 வரை ஊதியம் அதிகரிக்கலாம்.
4. இரண்டு / மூன்று வருடம் வரை ஒரே இடத்தில் வேலை செய்யலாம். வெறும் நான்கு மாதம் மட்டும் ஒரு இடத்தில் வேலை பார்ப்பதால் உள்ள் நடைமுறை சிக்கல்கல் எத்தனை. அதிலும் எம்.பி.பி.எஸ் முடிக்கும் தருவாயில் உள்ள் பெண்கள் - 22 வயதில் - திருமணமாகி சிலர் கர்ப்பமாக இருப்பது வாடிக்கை.
வயிற்றில் குழந்தையுடன் , தனியாக, பீகார் சென்று நான்கு மாதம் ஒரு ஊரில் தங்குவது என்பது நடைமுரையில் எவ்வளவு சிக்கல்களை உருவாக்கும்.
5. பிற்காலத்தில் அரசு பணியில் தொடர முடிவு செய்தால் வேலையில் சேரும் நாள் முதல் அரசு பணிக்காலம் கணக்கிலெடுக்கப்படும்.
இது தான் இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம்
மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக வீதியில் கோஷமிட்டவர்கள் , மாநில அரசு வேலை (அதே கிராமப்புரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு) வேண்டுமென்று நீதிமன்றம் வரை சென்று போராடியதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் பிரச்சனை எதில் உள்ளது என்று ...
தமிழகத்தை பொருத்த வரை கிராமத்திற்கு போவதில் பிரச்சனையே கிடையாது. கிராமங்களில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு பொது தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு 5000 விண்ணப்பங்களுக்கு மேல் தான் வரும்.
அரசு வேலை வேண்டாம் என்று மறுப்பவர்கள் 20 சதவிதம் கூட இருக்க மாட்டார்கள். எனக்கு வேலை கொடு என்று வழக்கு உரைத்து வேலை வாங்குபவர்கள் தான் இங்கு அதிகம். இவர்கள் (கிராமங்களில் இருக்கும் சுகாதார நிலையங்களில் வேலைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள்) அனைவரும் கட்டாய கிராமப்புற திட்டத்தை எதிர்த்ததன் காரணம் என்னவென்றால் அது நிரந்திர வேலைவாய்ப்பை பாதிப்பதால்.
அதனால் தான் தமிழக அரசின் திட்டம் இரண்டு வருட கட்டாய பணியை வலியுருத்திய போதும் ஒரு எதிர்ப்பும் கிடையாது. பட்ட மேற்படிப்பு தேர்வு முடிந்த அடுத்த நாளே பத்து மருத்துவர்கள் பொது சுகாதார துறை இயக்குனரின் அலுவலகத்திற்கு வந்து வேலையில் சேர உத்தரவு கேட்டதிலிருந்தே உண்மை நிலவரம் என்ன என்பதையும் பிரச்சனை எது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இதில் சொல்ல வேண்டிய் விஷயங்கள் பல உள்ளது. மேலும் ஒரு இடுகை எழுதலாம் என்று நினைத்துள்ளேன். உங்களில் சந்தேகங்கள் / கேள்விகளை பின்னூட்டத்தில் கூறினால் அடுத்த இடுகையில் விடை அளிக்கிறேன்.
இந்த தொடரின் அடுத்த இடுகைகள்
No comments:
Post a Comment