அனுப்புனர்
வட்டார மருத்துவ அலுவலர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
புதுக்கோட்டை பெறுனர்
துணை இயக்குனர் - சுகாதார பணிகள்
தூத்துக்குடி
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்:பொது சுகாதாரம் - ஆப்பரேசன் சிக்குன் குனியா (Operation Chickungunya)- வட்டார அளவிலான ஆய்வுக்கூட்டம் - சுகாதார ஆய்வாளர்களின் கருத்துக்கள் - தகாத வார்த்தைகளை (unparliamentary and filthy words) அலுவலக ஆய்வுக்கூட்டத்தில் உபயோகித்தல் - மருத்துவ அலுவலரை திட்டுதல் மற்றும் மிரட்டுதல் - கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துதல் - அறிக்கை பணிவுடன் சமர்ப்பித்தல் - தொடர்பாக
பார்வை: வட்டார அளவில் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மற்றும் சிக்-குன்-குனியா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தும் படி தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அவர்களின் உத்தரவு
பார்வையில் கண்ட தங்களின் உத்தரவின்படி 06/10/2006 மாலை இவ்வலுவலகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மற்றும் சிக்-குன்-குனியா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டனர்.
1. திருமதி. பட்டுக்கனி – DMCHO
2. வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுக்கோட்டை
3. மரு. பிரதீப் பிரேம் குமார் - முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்
4. முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்
5. மாப்பிள்ளையூரனி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்
6. வட்டார சுகாதார மேற்பார்வையாளர்
7. சமுதாய சுகாதார செவிலியர்
8. பகுதி சுகாதார செவிலியர்
9. சுகாதார ஆய்வாளர்கள்
10. கிராம சுகாதார செவிலியர்கள்
முதலில் கிராம சுகாதார செவிலியர்களிடம் இத்திட்டங்களை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுகாதார ஆய்வாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவ்வாய்வு குறித்த விரிவான அறிக்கை வருமாறு.
திரு.பீட்டர் பர்னபாஸ், திரு. ஆனந்தன், திரு. இசக்கி ஆகிய சுகாதார ஆய்வாளர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரிவித்தனர்.
- “கொசு மருந்து ஊற்றும் பணி சுகாதார ஆய்வாளர்களின் வேலையே கிடையாது”
- “ஒவ்வொரு HSCக்கும் ஒரு மஸ்தூர் நியமிக்கப்படவேண்டும்”
- “எனக்கு கீழ் மஸ்தூர் ஒருவரை நியமித்தால்தான் இப்பணியில் ஈடுபடுவேன். இல்லையென்றால் செய்ய மாட்டேன்”
- “முடிவைத்தானேந்தல் மருத்துவ அதிகாரி பொதுமக்களிடம் மருந்து ஊற்றினோமா என்று நேரடியாக விசாரிக்கிறார்”
- “எங்களை யாரும் மேற்பார்வையிடக்கூடாது”
- “நாங்கள் வேலை செய்தோமா என்று மக்களிடம் விசாரிக்க கூடாது”
- “நாங்கள் ஐந்து மணி வரை ஏரியாவில் இருந்தோமா என்று விசாரிக்கக் கூடாது”
- “ஐந்து மணி வரை எங்களை வேலை செய்ய சொன்னால் வெறும் ஐந்து வீட்டிற்கு மட்டும் ஊற்றுவோம் பரவாயில்லையா?”
இவ்வாறு கருத்துகள் கூறப்பட்டபின் முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலர் ஈ.பிரதீப் பிரேம் குமார் கீழ்க்கண்டவாறு கூறினார் "நீங்கள் என் வீட்டிற்கோ மேடம் (வட்டார மருத்துவ அலுவலர்) வீட்டிற்கோ வேலை செய்யவில்லை. அரசாங்கத்தால் உங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை செய்கிறீர்கள். செய்ய முடியுமா ? முடியாதா ? முடியாது என்றால் எழுத்துமூலம் தெரிவியுங்கள். அதன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பேன்
அதன் பின் முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் வரும் ஸ்பிக் நகர் துணை சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் திரு.மி.டெரன்ஸ் எழுந்து
"நீ யாருவே எங்களை கேட்க #$#$#$ (அச்சில் ஏற்ற முடியாத தகாத சொல்)... வெளிய வாவே... இந்த ஏரியாவ விட்டு எப்படி தாண்டுவ... எங்கவே போவே... தூத்துக்குடிக்கு எப்படி வருவன்னு பாக்கன்...
இது நடந்தபின் சில சுகாதார ஆய்வாளர்கள் எழுந்து மரு.பிரதீப்பை மிகத்தரக்குறைவான வார்த்தைகளால் ஏக வசனத்தில் திட்டி அவரை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தனர்.
நானும் வட்டார சுகாதார மேற்பார்வையாள்ர் திரு.P.T.நாராயணனும் "எல்லோரும் அமைதியாக பேசுங்கள்" என்றோம். உடன் முடிவைத்தானேந்தல் சுகாதார ஆய்வாளர் திரு. செல்வராமன் வட்டார சுகாதார மேற்பார்வையாளரை (BHS - சுகாதார ஆய்வாளரது மேற்பார்வையாளர்) நோக்கி "நீ எத்தன வீட்டிற்கு ஊத்துன, நீ யாரு என்ன கேட்க" என்று அவரை நோக்கி பாய்ந்தார். அவரை முள்ளக்காடு சுகாதார ஆய்வாளர் திரு பெரியசாமி தடுத்தார்.
சமுதாய சுகாதார செவிலியர் திருமதி பிரேமா முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலரிடம் "சார் நிலைமை சரியில்லை, please, வெளியே சென்றுவிடுங்கள்" என்று கூறினார். முள்ளக்காடு மருத்துவ அலுவலர் மரு.பிரதீப்பை பாதுகாப்பாக வெளியே கூட்டி சென்றார்.
அதன் பின் சுகாதார ஆய்வாளர்களில் ஒரு சிலர் எழுந்து கத்திகொண்டு இருந்தனர். ஒரு சிலர் “மருந்து ஊற்ற முடியாது, வேனும்ணா டிஸ்மிஸ் பண்ணுங்க” என்றனர். ஆய்வுக்கூடத்தை விட்டு வெளியே சென்றனர்.
சுகாதார ஆய்வாளர்கள்
1. எழுந்து நின்று கத்தியதாலும்
2. மருத்துவ அலுவலர் ஒருவரை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாலும்
3. மருத்துவ அலுவலர் ஒருவரை மிரட்டியதாலும்
4. அவர்களின் மேற்பார்வையாளர் (BHS) நோக்கி உடலால் தீங்கிழைக்கும் நோக்கில் முன்னேறியதாலும்
5. ஒரு சிலர் ஆய்வு நடத்தும் அதிகாரியின் அனுமதியின்றி வெளியே சென்றதாலும்
6. “எங்காளால் இப்பணியை இனிமேல் செய்ய முடியாது” போன்ற அரசு விதிகள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளை மதியாமல் பேசியதாலும்
7. மேலதிகாரியை மதியாமல் பேசியதாலும்
கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது
இவ்வறிக்கையினை உங்களின் பார்வைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்
இதனால் சிக்-குன்-குனியா பணிகள் குறித்து ஆண் களப்பணியாளர்களை ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
எனவே தாங்கள் தயை கூர்ந்து வருங்காலங்களில் இப்பணிகள் குறித்து மருத்துவ அலுவலர்கள் முறையான மேற்பார்வையும் ஆய்வும் நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வட்டார மருத்துவ அலுவலர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
புதுக்கோட்டை